திங்கள், பிப்ரவரி 25, 2013

விஸ்வரூபம்



        விஸ்வரூபம்(சிறுகதை)சத்யபிரபு.ப

பார்த்தவுடன் மனதில் பதிந்து கொள்ளும் முகம் ஒரு சிலருக்கு மட்டும் உண்டு. ஒரு சிலரல்ல ஒருவருக்குதான் என்று யாரேனும் எடக்கு மடக்கு பேசினால் அவர்களுக்கு அவள் முகத்தைதான் அடையாளம் காட்டுவேன். அப்படியொரு முகம் அவளுக்கு. இரண்டு நாட்களுக்கு முன்பு தூறல் போட்டுக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த சாலையில்தான் அவளை பார்த்தேன். தூவானம் மேலில் படாமல் இருக்க துப்பட்டாவை குடையாக்கி வெண் பற்கள் தெரிய புன்னகைத்து சாலையோடு சேர்த்து என்னையும் கடந்து சென்றது அந்த சுடிதார் தேவதை. மின்னல் வெளிச்சம் உமிழ கையில் மொபைல் இருக்கிறது சட்ட சிக்கல் வரும் என்பதால் அவளை கண்ணில் படம் பிடித்தேன். அது இருட்டாக இருக்கும் என் இதயத்துக்குள் நுழைந்து கொண்டது. இடைவிடாது மின் தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் இரண்டு நாட்களாக எனக்கு மட்டும் வெளிச்சம் போட்டுக்காட்ட ஓயவில்லை என் இதய அறை. அவள் கடந்து சென்ற ஒற்றைக் காட்சி மட்டும் இருநூற்று ஐம்பது தடவைக்குள் மேல் வெள்ளிவிழாவை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என் இதய அரங்கில்.

இரண்டு நாட்களாக அவளைப்பற்றி அறிந்து கொள்ள அலைந்து திரிந்ததில் இந்த வழியாகத்தான் வருவாள் என்ற ஒற்றை விவரம் மட்டும் கிடைக்க, என் பைக்கில் அமர்ந்தபடி இரண்டு மனி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறேன் இன்று. கீங்..கீங்.. என்ற சத்தம் கேட்டு எதேச்சையாக கைகடிகாரத்தை பார்த்த போது அது காலை பதினோறு  மனி எனக்காட்டியது.
 இன்னும் வரலயே 
  ஏமாற்றமாக திரும்பி சாலையை பார்த்தேன்.  தூரத்தில் இளஞ்சிவப்பு  நிற ஸ்கூட்டியில், அவள் அவளா  அவளேதான். உறுதியானதும் உடம்பில் ஒரு பதற்றம் வந்தது. அருகில் வர வர நெஞ்சுக்குள் ஒரு சந்தோசம். கைகள் இரண்டும் தானாக தலையை கலைத்து சீவ ஆரம்பித்தது அவள் பார்வை விழவேண்டும் என்பதற்காக. நெருங்கி வருகிறாள் வந்தாள் கடந்தும் போய்விட்டாள்.  ஆனாலும் அவள் பார்வை என் மேல் விழுந்ததாக தெரியவில்லை.
 ச்சேய் பார்க்காமல் போய்விட்டாளே 
 என்று வெதும்பினாளும் அவள் முகத்தை பார்க்க மனது ஏங்கியது.  உடனே என் பைக்கும் அவள் பின்னால் செல்ல  சிறிது தூரம்தான் சென்றிருக்கும் அதற்குள் சிகப்பு விளக்கு எங்களை வழிமறித்தது. நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கிடையில் அவளுக்கு பின்னால் நின்றிருந்த என் வண்டியை காலால் நகர்த்தியபடியே அவளுக்கு பக்கவாட்டில் நிறுத்திக்கொண்டேன். அதற்குள் ஒருவர் 
 என்னையா அவசரம் பொறுய்யா 
 என்று கடிந்து கொண்டார். பேசியவரை அதட்டி இல்லை இல்லை முடிந்தால் அடித்து அவள் பார்க்கும்படி ஹிரோயிசம் பன்னலாம்னு திரும்பிப் பார்த்தேன். என்னைவிட சற்று பலமானவன் இல்லை வேண்டாம் பலமானவர் போல் தெரிந்தார். அதனால் விட்டுவிட்டேன். அவர் சொன்னதையும் மறு காதால் வெளியேற்றிவிட்டு, மீண்டும் தலையை கலைத்து, கண்ணாடியை திருப்பி, கைகளை உயர்த்தி, தலையை சீவ ஆரம்பித்தேன் பார்க்கவில்லை. திமிர் பிடித்தவள் போலும். ஆனால் இப்போது எனக்கு திமிர் பிடித்திருந்தது அவளது திமிர்.
   
பச்சை விளக்கு பாதை விட மீண்டும் பயணிக்க தொடங்கினாள் நானும்தான். எங்கே செல்வாள் என்ற கேள்வியும் எனக்குள் எழாமலில்லை. ஒரு பர்லாங் தூரம் கடந்திருப்போம் சாலையின் ஓரம் சிறு கூட்டம் எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கண்டுகொள்ளாமல் போய்விடுவாள் என்ற என் கணிப்பை பொய்யாக்கி வண்டியை நிறுத்திவிட்டு   ’’என்னாச்சி  என்று கேட்டுக்கொண்டே அங்கே சென்றாள். நான் சற்று பின்னால் வண்டியில் அமர்ந்துகொண்டே என்ன நடக்கிறது என்று எட்டி பார்க்க ஆரம்பித்தேன். வயது முதிர்ந்த மூதாட்டி ஒன்று தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்தது. யாரோ வண்டியில் போனவர்கள் இடித்துவிட்டு பார்க்காமல் போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அருகில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க  அவள் மட்டும் பதட்டமாக தன் வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை வேகமாக எடுத்து வந்து பாட்டியை தன் மடியில் கிடத்தி முகத்தில் தண்ணீரை தெளித்தாள். பாட்டி லேசாக கண் விழித்து அரை மயக்கத்தில் முனங்க ஆரம்பித்தாள். 

ப்ளீஸ் யாரவது ஹெல்ப் பண்ணுங்க உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சி போனா காப்பாத்திடலாம். என்னகிட்ட வண்டி இருக்கு யாராவது கூட வாங்க

என்று பதட்ட வார்த்தைகளை பக்குவபடுத்தி சொன்னாள்.

"சும்மா இரும்மா இது அக்சிடென்ட் கேசு பாட்டிக்கு வேற வயசாயிருச்சி கூட்டி போம்போது பாதிலேயே போச்சுன்னா போலிஸ் கேசாயிரும். 

என்று ஒருவர் பயமுறுத்த முன் வந்த ஒரு சிலரும் பின் வாங்கினார்கள். 

"உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா எதாவது வண்டியையாவது நிறுத்துங்கள்என்றாள்.
அப்போது இரண்டு இளைஞர்கள் பைக்கில் அவ்வழியே வேகமாக செல்ல வழிமறித்தார்கள். என்ன என்று கேட்ட அவர்களுக்கு பாட்டியைப் பற்றி சொல்ல 

"எங்களால முடியாது லேட்டயிருச்சி அவசரமா போறோம் 

என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு நேரமும் அவளின் செயலை உற்று நோக்கியதில் வியப்பானேனே தவிர நானும் உதவி செய்ய மறந்து விட்டேன்.
என்ன ஆகியும் என்னை மட்டும் அவள் பார்க்கவில்லை. வருத்தம் இருந்தாலும் வேடிக்கை பார்க்கிறோமே என்ற உணர்வு என்னை நெரிக்க பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். வேகமாக என்னை தாண்டி சென்ற ஆட்டோ ஒன்று அவளிடத்தில் போய் நின்றது. அவசரமாக இரண்டு பேர் கீழே இறங்கினார்கள். அடிபட்டவரின் உறவுக்காரர்கள் போல                       

 ரொம்ப நன்றிம்மா  

அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றினார்கள் விருட்டென்று ஆட்டோ கிளம்பியது. கூட்டமும் கலைந்தது.
 மீண்டும் அந்த ஸ்கூட்டி அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. நானும் பின்னாடியே புறப்பட்டேன் என்று சொல்ல தேவையில்லை. எங்கேதான் போகிறாள். என்னுள் பல கேள்விகள் எழுந்து அணைந்த நேரம் அவள் வண்டியை அணைத்தாள். அவ்விடம் கமலுக்கு நிறைய கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருந்ததும், வாழ்த்திய வாசகங்களும் சொல்லாமல் சொல்லியது அது தியேட்டர் என்றும் அதில் விஸ்வரூபம் படம் ஓடுகிறது என்றும். அவள் பைக் பார்க்கிங்கை தேடினாள். நான் பாக்கெட்டில் பர்ஸை தேடினேன். அதில் போதுமானதாக பணம் இருந்ததால் இப்போது நானும் பார்க்கிங்கை தேடினேன். பைக்கை நிறுத்திவிட்டு டிக்கெட் கவுண்ட்ருக்குள் நுழைந்தபோது அவளை பார்த்தேன்.
  
ஏண்டி லேட்டு.?”

வர்ற வழியிலே சின்ன ப்ராப்ளம்

 ஏன் என்னாச்சு.?”

அப்புறமா சொல்றேன்... படம் போட்டு எவ்வளவு நேரமாச்சு.?”

 பத்து நிமிஷம் ஆச்சு சீக்கிரம் வா.  ஏய்... என்னடி... பாத்துகிட்டு இருக்க.?”

யாரோ என்னையே பாக்கற மாதிரி இருக்கு

ஆமா, எல்லாரும் ஒன்னயதான் பாத்துகிட்டு இருக்காங்க வேமா உள்ள வா
  அவள் தோழி போல இருவரும் பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். என்னை பார்த்தாளா தெரியவில்லை. நானும் அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். படம் பத்து நிமிடம் ஓடியிருந்தது. படத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தது. இருந்தும் பெண் தன்மையில் நளினமான கமலும் அந்த சண்டைக்கட்சியும் என்னை ஈர்த்ததில் அவளை சில நிமிடம் மறந்திருந்தேன்.
 இடைவேளை என்னை எழுப்பிவிட மீண்டும் அவள் நினைப்பு. இப்போது முடிவு செய்திருந்தது மனது எப்படியும் அவளிடம் பேச வேண்டும் என்று. இடைவேளை வெளியில் கூட்டமாக இருந்தது. அவளை பார்த்தேன் பாப்கார்ன் விற்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறே பின்னால் சென்றேன். அவளுக்கு முன்னால் சென்று எதேச்சையாக பார்பதுபோல் பார்த்து பேச வேண்டும் என்று வேகமாக சென்றேன். முன்ன பின்ன பாக்காத ஆள் வலியப்போய் பேசுவதால் பேசுவாளா இல்லை ஜொள்ளு விடுகிற ஆள் என்று கோபத்தில் திட்டிவிடுவாளா பக்கம் செல்ல செல்ல பதற்றம் பற்றிக்கொண்டு இதயத்துடிப்பு வேகமெடுத்தது. அவளை தாண்டிய நொடிப்பொழுதில்ஹலோஎன்றது ஒரு குரல். நிச்சயம் இந்த அழகிய வார்த்தை அவள் குரலிலிருந்துதான் அவிழ்க்கப்பட்டிருக்கும் என நினைத்து திரும்புவதற்குள் பளாரென்று அரை விழும் சத்தம் திரும்பிபார்த்தால், அவள்தான் அடித்திருக்கிறாள் பக்கத்தில் நின்றவர் கன்னத்தை தடவிக்கொண்டிருந்தார். வேகமெடுத்த என் இதயத்துடிப்போ இப்போது ஏறு வரிசையில் எகிற ஆரம்பித்தது. 

ஆத்தாடி பாளோவ் பண்ணது தெரிந்து என்மேல் விழவேண்டிய அடி அவர் மேல் விழுந்து விட்டதா

என்று நினைத்துகொண்டிருக்குபோதே என்னை கேட்காமல் என் உடம்பை இரண்டடி பின்னால் இழுத்துகொண்டது என் கால்கள். அடி வாங்கியவர்.      

ஹலோ எதுக்குங்க   

என்று பேச்சை முடிப்பதற்குள் பளாரென்று இன்னொரு அரை விழுந்தது. நானோ இன்னும் இரண்டடி பின்னால் செல்ல யாரோ முதுகில் கைவைத்து முன்னாள் தள்ளினார்கள் மூச்சே நிற்பதுபோல் ஆகிவிட்டது. திரும்பிப் பார்த்தேன் நல்லவேளை அது அங்கிருந்த சுவர் திரும்பி அவளை பார்க்க

ராஸ்கல் கூட்டத்தில இடுப்பையா கிள்ளுற

என்று சொன்னாள். இப்போதுதான் இதயதுடிப்பு இறங்குவரிசைக்கு மாறியது. அதற்குள் தூரத்திலிருந்து இரண்டு குண்டர்கள்

என்னம்மா என்ன பிரச்சனை

என்று கேட்டுக்கொண்டு வந்தார்கள் தியேட்டர்காரர்கள் போல. அவர்களை பார்த்தால் என்ன பிரச்சனை என்று கேட்டு அடிப்பவர்கள் போல் தெரியவில்லை, அடித்து விட்டுத்தான் பிரச்சனையைக் கேட்பார்கள் போல. அவர்கள் வர எனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருந்தது ஆனால் அவளோ 

இல்லை ஒன்னும் பிரச்சனை இல்லை நீங்க போங்க 

என்று சொல்லிவிட்டாள். அடி வாங்கியவனும் அக்குண்டர்களை பார்த்ததாலோ என்னவோ எதுவும் பேசாமல் அவளை ஒரு மாதிரியாக முறைத்துவிட்டு போய்விட்டான். பிரச்சினையும் முடிந்துவிட்டது.

 இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பமானது இம்முறை நான் 
அவளை நினைக்கவேயில்லை. அவள் இடுப்பைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.படம் ஓடிக்கொண்டிருந்தது நான் படத்தை பார்க்கவில்லை. என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது வேறு. 

அவன் எப்ப இடுப்பை கிள்ளியிருப்பான் அடிவாங்கிய உதா சட்டைக்காரன் எதித்தாப்லதானே வந்தான் நம்மதான் பார்த்து கொண்டிருந்தோமே வாய்ப்பே இல்லையே

என யோசித்து யோசித்து அந்தகாட்சியை மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்த்தேன்.

நிச்சயம் அவன் கிள்ளவேயில்லை

முடிவு கிடைக்கவும் படம் முடியவும் சரியாக இருந்தது. பிறகு ஏன் அடித்தாள் கேட்போமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே வெளியில் வந்து அவளை தேடிப் பார்த்தேன். அவளும் அவள் தோழியும் ஸ்கூட்டியை எடுத்துகொண்டிருந்தார்கள். எதுவானானாலும் சரி கேட்போம் என முடிவு செய்து அவளருகே சென்று வாயெடுத்தேன். அதற்குள் அவர்களே அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க செவியை மட்டும் அவர்களிடத்தில் விட்டு விட்டு நான் சற்று தள்ளி நின்றேன்.

ஏண்டி அவன சும்மாவிட்ட..? இந்த்தமாதிரி ஆளெல்லாம் போலீசில் மாட்டிவிடனும்

வேண்டாம் விடுடி    

ஏண்டி விடச்சொல்றே.?”

ஏன்னா அவன் ஏ இடுப்ப கிள்ளவேயில்லை    
 "கிள்ளவேயில்லையா....?  அப்ப எதுக்குடி அடிச்ச.?”

வர்ற வழியில்யில் ஒரு ப்ராப்ளம்னு சொன்னேன்ல   
 ஆமா, அதுக்கு

ஒரு பாட்டி அடிபட்டு மயங்கி கிடந்தாங்க, அந்த பாட்டிய ஹாஸ்பிட்டல்ல சேக்குறதுக்காக அவன்ட லிப்ட் கேட்டா அவசரமா போறோம் லேட்டச்சினு சொன்னான். பாத்தா படத்துக்கு வந்துருக்கிறான் ராஸ்கல். அதான் இப்படி சொல்லி ரெண்டு அரைவிட்டேன்.

அவள் சொல்லி முடிக்க. என் மனசாட்சி மைன்ட் வாய்சில் என்னிடம் சொன்னது.

நல்ல வேளை அவ ஒன்ன பாக்கலை இல்லேன்னா முதல் அரை உனக்குதான் விழுந்திருக்கும்  பாட்டி அடிப்பட்டதை நீ வேடிக்கை பாத்துகிட்டு நின்னதுக்கு.

முதல் முறையா, அவ என்ன பாக்காததுக்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன். இன்னும் என் செவி அவர்களிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் பேசினார்கள்.

ஏய் அவனப் பாத்தா ரவுடி மாதிரி இருக்கு. காதுல கடுக்கன் கழுத்துல நாய் செயின் கையில கலர் கலரா கயிறு ஏண்டி அவன்கிட்ட பிரச்சனை.?”

இருக்கட்டும் அதனால சும்மா விட சொல்றியா? மனிதத்தன்மையே இல்லாத இவனெல்லாம் ஒரு மனுசனா.? நான் ஏன் அடிச்சன்னு அவனுக்கு தெரியுதோ இல்லையோ எனக்குள்ள இருந்த கோபத்துக்கு இப்ப ஒரு அமைதி கிடைச்சிருக்கு அது போதும். பிரச்சனை எப்பவேனாலும் எந்த ரூபத்திலவேனாலும் வரலாம் அதுகேத்த மாதிரி நம்மள மாத்திக்கனுமே தவிர பயப்புடக்கூடாது.  ஏதாச்சும் பிரச்சினை வந்தா அப்புறம் பாத்துக்கலாம் வா போகலாம்.

அவள் சொல்லி முடித்தாள். நான் தியேட்டருக்குள் படத்தை 
பார்க்கவில்லை ஆமாம். இப்போது அவளைப் பார்த்தேன் அவளுடைய அழகிய ரூபம் எனக்கு விஸ்வரூபமாக தெரிந்தது.


  
 

திங்கள், பிப்ரவரி 18, 2013

காதல் கவிதைகள்



கவிதை எழுதுபவன்தான் கவிஞன் என்றால்
நானும் கவிஞனே
உன் பெயர் எழுதியதால்...!
பேசவே
அனுமதி இல்லாத தேர்வறையில்
அவ்வப்போது
சிரித்துக்கொண்டிறுக்கிறது.
அவள் கால்கொலுசு மட்டும்...!  

தென்மேற்கு பருவக்காற்று
கூட்டிச்செல்லும் மேகக்கூட்டங்களோடு
கூட மறுக்கிறது
ஒரு குட்டி மேகம் மட்டும்.
அது அவளின் கூந்தல்...!

உன்
ரெட்டை ஜடை வாய்க்காலில்
நீந்திச் செல்கிறதோ நீர்.
நீ சூடும் பூ மட்டும்
வாட மறுக்கிறதே... 
  
உலகிலேயே முதல் குழந்தை கவிஞன்
நானாகத்தான் இருப்பேன்; ஆம்
ஒன்றாம் வகுப்பிலே
உன் பெயர் எழுதிவிட்டேனே…! 

பொய் பேசும் கவிதை
கவிதை பொய் பேசும்
உரைநடை உண்மை பேசும்.
உன்னை கவிதை என்கிறேன்
நீயோ
என்னை காதலிக்கிறேன் என்கிறாய்.
கவிதை பொய் பேசுகிறதோ...?
 

திரும்பாத தேவதை
அளவான உடை
அழகான இடை
அவள் பின்னாலே என் நடை
அவள் பார்வை என் மேல் விழ
நான் கையாண்ட கலை
இருமல் தும்மல் விக்கல்
ஆயினும் திரும்பவில்லை அவள்
இறுதியாக அவள்
நுழைந்த இடத்தில்
என் பார்வை விழுந்த இடத்தில்
எழுதப்பட்டிருந்தது.
உங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
"
காது கேளாதோர் மருத்துவமனை."

நாடிப் பிடித்த மருத்துவர்
வியாதி இல்லையென்று சொல்லிவிட்டு
வியப்பாக பார்க்கிறார்.
எதிரில் நிற்கும் என்னவளை
எதேச்சையாக பார்த்ததால்
எகிரிப்போன இதய துடிப்பால்...!


அனைவருக்கும் அசெளகரியமாய்ப்படும் 
குண்டும் குழியுமானத் தார்சாலை
எனக்கு மட்டும் செளகரியப்படுகிறது. 
அடர்த்தியான ஆட்டோ பயனத்தில்
அவளின் பக்கத்தில் நான்...!


என்னவளே,
ஒருவிதத்தில்
நீயும் பிச்சைக்காரனும் ஒன்றுதான்.
கோபப்படாதே
அவன் திருவோடு குலுங்கினாலும்
உன் திருவாய் குலுங்கினாலும்
கேட்பதென்னவோ
சில்லறை சத்தம்தான்...!

                         அன்புடன் சத்யபிரபு.ப